விவரம்

இந்த வலைப்பூ எதற்காக?

இது தமிழ் மொழியின் ‘யாப்பிலக்கணம்’ என்று அறியப்படும் கவிதை இலக்கணத்தைக் கற்க/கற்பிக்க உருவாக்கப்பட்ட வலைப்பூ

இதை எவ்வாறு பயன்படுத்துவது?

மிக எளிது. இதில் உள்ள இடுகைகளை (பாடங்களை) வரிசையாக படிக்கவும். அவற்றைப் புரிந்து/உணர்ந்து கொள்க. அவற்றின் இறுதியில் தரப்பட்டுள்ள பயிற்சிகளை (நேர்மையாக) செய்க. நீங்கள் யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ளலாம்.

இதைக் கற்க எத்தனை காலம் ஆகும்?

என்வரையில் ‘கற்றல்’ என்பதற்குத் தொடக்கம் மட்டுமே உண்டு, முடிவு இல்லை. பயப்படாதீர்கள்! என் கணக்குப்படி அடிப்படை ‘யாப்பிலக்கணத்தை’ 15 முதல் 20 பாடங்களில் கற்பித்துவிடலாம். ஒவ்வொரு பாடமும் படிக்க 10 முதல் 20 நிமிடங்கள் ஆகலாம். வாரம் ஒன்று முதல் மூன்று பாடம் வரை (உங்கள் திறன்/வசதியைப் பொறுத்து) கற்க முடியும். எனவே தோராயமாக 10 முதல் 15 வாரத்தில் அடிப்படையாக கற்றுக்கொள்ள முடியும் - அதாவது 3 - 4 மாதங்களில் நீங்கள் ஒரு கவிஞராகிவிடலாம் (நல்ல கவிதை எழுதுவீர்கள் என்பதற்கு நான் உத்திரவாதம் தர இயலாது!)

இவ்வலையில் உள்ள பாடங்களை மட்டும் கற்றால் போதுமா?

நிச்சயம் இல்லை! இது ஒரு தொடக்கம் மட்டுமே. வாழ்நாள் முழுவதும் நீங்கள் மெருகேறிக்கொண்டேதான் இருப்பீர்கள் (கற்றல் இருக்கும்வரை!) நல்ல கவிதை என்பது தோட்டத்தில் பட்டாம்பூச்சியைப் பிடிப்பது போல, சில சமயம் நாள் முழுதும் அலைந்தாலும் ஆட்டம்காட்டிவிட்டுப் பறந்துவிடும், சில சமயம் தானாக வந்து நம் தோளில் அமரும்...

மேலும், இவ்வலையில் நான் என் அறிவுக்கு எட்டியவரையில், நான் உணர்ந்து/புரிந்து கொண்ட அளவில்தான் ‘யாப்பிலக்கணத்தை’க் கற்பிக்கப் போகிறேன், நிச்சயம் இது முழுமையானது அல்ல! மேலும், இப்படி சொன்னல் இது இன்னும் எளிதாய் புரியும் என்று எனக்குத் தோன்றும் இடங்களில் நான் என் வழியில் கருத்துக்களைச் சொல்வேன், எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய் பரிணமித்து வரும் இதை என்னொருவனுக்குள் அடக்கிவிட இயலாது... இங்கே தொடங்குங்கள், பின் உங்கள் இஷ்டம் போல விரிவடையுங்கள்!

இப்பாடங்கள் எனக்குப் புரியவில்லை என்றால்?

இயன்றவரை எளிதாகத்தான் கற்பிக்க முயலப் போகிறேன். என்றாலும் ஒரு முறை படித்த உடனே எல்லோருக்கும் எல்லாமும் புரிந்துவிடும் என்று சொல்ல முடியாது. இரண்டாம் முறை படித்துப் பாருங்கள். அதுவும் சரிப்படவில்லை என்றால் தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் (மின்னஞ்சலில்: vijay10.n@gmail.com) இந்த பாடத்தில் இது புரியவில்லை என்று தெளிவாகச் சுட்டிக்காட்டினால் நானும் தெளிவாக உதவுவேன், அதுவே எனக்கும் வசதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக