1.11.2016

பாடம் - 4: அடி



செய்யுள் (அல்லது கவிதை/யாப்பு/பாட்டு…) என்பதற்கு ஆறு உறுப்புகள் என்று தமிழ் இலக்கண நூலார் வரையறுத்துள்ளனர்

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன அவை.  

அவர்கள் வைத்த முறையில் முதல் மூன்றைப் பற்றிப் படித்துவிட்டோம் (அவற்றைஉள்வாங்கிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்!) அடுத்த மூன்றையும் கொஞ்சம் முறைமாறிக் கற்கப் போகிறோம். அவர்கள் இந்த முறையை வைத்ததற்கும் நான் முறைமாற்றிக் கற்பிக்க விழைவதற்கும் சரியான காரணங்கள் உள்ளன (அதையெல்லாம் நான் விளக்கப் போவதில்லைபோகப் போக நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்!) எனவே, சீருக்கு அடுத்தபடி நாம்அடிபற்றிக் கற்கப் போகிறோம்.

எழுத்துக்கள் அசையாகவும், அசைகள் சீராகவும் சேரும், அதே போல சீர்கள் சேர்ந்து நிற்பதுஅடி’. இயற்றமிழில் (பேச்சு, வசனம், உரைநடை) ‘தொடர்’ (’வாக்கியம்’) என்பதைப் போல செய்யுளில்அடி’ (கிட்டத்தட்ட!)

எடுத்துக்காட்டாய்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற திருக்குறளில் இரண்டு அடிகள் உள்ளன. அதே போல,

நாடன் என்கோ ஊரன் என்கோ
பாடிமிழ் பனிகடற் சேர்ப்பன் என்கோ
யாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின் அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும்
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங்கு எழுமே!

புறநானூற்றின் இந்த (49வது) பாட்டில் 6 அடிகள் உள்ளன. 5வது அடி தவிர மற்ற ஐந்து அடிகளிலும் நான்கு சீர்களும், 5வது அடியில் மட்டும் மூன்று சீர்களும் உள்ளன. இது நேரிசை ஆசிரியப்பா (முந்தைய பாடத்தில் இதைப் பற்றிக் குறிப்பிட்டோம்!) மேலே உள்ள திருக்குறள் வெண்பாவில் முதல் அடி நான்கு சீரும் இரண்டாம் அடி மூன்று சீரும் கொண்டுள்ளதையும் கவனிக்க. ஒவ்வொரு பாவிற்கும் இப்படிக் குறிப்பிட்ட அடி அமைப்பு உண்டு (இதைப் பின்னால் பார்க்கலாம்!)

பாடலின் கடைசி அடிக்குஈற்றடிஎன்று பெயர். கடைசி அடிக்கு முந்தைய அடிக்குஈற்றயலடிஎன்று பெயர் (ஈறு + அடிஈற்றடி; ஈறு+அயல்+அடிஈற்றயலடி. ‘ஈறு’ – கடைசி, இறுதி. ‘அயல்’ – அடுத்தது, (இங்கே) முந்தையது!)

ஓரே ஒரு சீர் அடியாகாது (அது தனிச்சொல்அல்லது கூன்எனப்படும்)

இரண்டு முதல் எத்தனை சீர்கள் வேண்டுமானாலும் சேர்ந்து ஒரு அடியாகலாம். அடியில் அமைந்த சீர்களின் எண்ணிக்கையை வைத்து அடிகளுக்குப் பெயர் வழங்கப்படும்:

2 சீர்குறளடி
3 சீர்சிந்தடி
4 சீர்அளவடி
5 சீர்நெடிலடி
6 (அதற்கு மேற்பட்ட சீர்) – கழிநெடிலடி

குறள்’ ‘சிந்துஎன்பன சிறுமையைக் குறிக்கும் (’குறளன்’ ‘சிந்தன்என்று குள்ளமானவர்களைக் குறிக்கும் சொற்கள் இருந்திருக்கின்றன!) இலக்கணத்தில்குறள்என்பது ‘2’ என்றும், ‘சிந்துஎன்பது ‘3’ என்றும், ‘அளவுஎன்பது ‘4’ என்றும் வரும். இந்தச் சொற்களை இந்த எண்களோடு தொடர்புபடுத்தி நினைவில் கொள்க. (’சிந்துஎன்பதைசிந்துப்பாஎன்பதோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்!)

ஆறுவது சினம் (ஆத்திச்சூடி) -குறளடி’ (இரண்டு சீர்)
பகவன் முதற்றே உலகு (திருக்குறள்) -சிந்தடி’ (மூன்று சீர்)
யாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை (புறநானூறு) -அளவடி’ (நான்கு சீர்)

விண்ணீரும் வற்றிப் புவிநீரும் வற்றி விரும்புமழைத்
தண்ணீரும் வற்றிப் புலவோர் தவிக்கின்ற காலத்திலே
உண்ணீருண் ணீரென்று உபசாரம் சொல்லி உபசரித்துத்
தண்ணீரும் சோறும் தருவான் திருபனந் தாள்பட்டனே

-என்ற காளமேகக் கவிஞரின் பாடல் நான்குநெடிலடிகளால் அமைந்ததாகும் (ஐந்து சீர்)

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்தநல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம் பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்

-என்ற மகாகவி பாரதியின் பாடல் நான்குகழிநெடிலடிகளால் அமைந்ததாகும்.

கழிநெடிலடி’ 6க்கு மேற்பட்டு எத்தனை சீர்களாலும் வரும்.

6 சீர் இருப்பதுஅறுசீர்க் கழிநெடிலடிஎன்றும்,
7 சீர் இருப்பதுஎழுசீர்க் கழிநெடிலடிஎன்றும்,
8 சீர் இருப்பதுஎண்சீர்க் கழிநெடிலடிஎன்றும் வரும். இப்படியே மற்ற எண்ணிக்கையும்.

அறுசீர், எழுசீர், எண்சீர் கழிநெடிலடிகளைப் பொதுவாக காணலாம் (விருத்தம் எனப்படும் பாட்டில் இவை அமையும்). 9, 10, 11 எல்லாம் மிக அரிது. ஆனால், பன்னிரண்டு, பதினாலு, பதினாறு சீர்க்கழிநெடிலடிகள் கொஞ்சம் நிறையவே உள்ளன (காரணம் இவை 6, 7, 8-இன் இருமடங்கு (டபுள்!) என்பதால், அவற்றை இரண்டிரண்டாய் எழுதிவிட்டால் இவை அமைந்துவிடும்!) பொதுவில் ஒற்றைப்படை எண்ணைவிட இரட்டைப்படை எண் கொண்ட கழிநெடிலடிகள் அதிகம் காணப்படும் (இயற்றுவது எளிது!)

கொசுறு: கலம்பகம்என்ற சிற்றிலக்கிய வகையில்புயம்என்று ஒரு வகைப் பாடல் இருக்கும், அதை நீண்ட அடிகள் கொண்ட பாடலாய் இயற்றுவது ஒரு மரபு. நூற்றியிரண்டு சீர் (102), நூற்றிநாற்பது சீர் (140) என்றெல்லாம் எழுதியுள்ளனர்! (அதாவது, ஒரு பாடலின் ஒரே ஒரு அடியில் 140 சீர்கள் இருக்கும், இப்படி நான்கு அடிகள்!)

அடி பற்றி இவ்வளவுதான்.  

ஆனால், அடியில் இத்தனை சீர் என்று எப்படி வரையறுப்பது?  
அதாவது, இதுவரை ஒரு சீர் என்று எப்படி புரிந்துகொள்வது?

சீர் என்பதுசொல்என்பதற்கு இணையான கவிதையின் உறுப்பு என்று முன்பே பார்த்தோம்.  

ஒரு சொல் ஒரு சீராக இருக்கலாம், இரண்டுமூன்று சொற்கள் ஒரே சீராக இருக்கலாம் அல்லது ஒரே சொல் இரண்டு சீராக நிற்கலாம், எது எப்படி என்று எவ்வாறு அறிவது?

முதலில், மேலே சுட்டிய பாடல்களில் இருந்து சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:

ஆறுவது சினம்’, ‘பகவன் முதற்றே உலகு’ – இவற்றில் ஒவ்வொரு சொல்லும் ஒரு சீராக உள்ளன.

யாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை’ – இதில்ஓங்குவாள்என்பது இரண்டு சொல் (ஓங்கு+வாள்) ஆனால் ஒரே சீராக உள்ளது.

பண்ணிய பாவ மெல்லாம் பரிதிமுன் பனியே போல’ – இதில்பாவமெல்லாம்என்ற ஒரு சொல்பாவ மெல்லாம்என்று இரண்டு சீராக உள்ளது. (’பரிதிமுன்என்று இரண்டு சொல் ஒரே சீராக உள்ளது!)

உண்ணீருண் ணீரென்று உபசாரம் சொல்லி உபசரித்துத்’ – இந்த அடியில்உண்ணீருண் ணீரென்றுஎன்றுஉண்ணீர்என்ற ஒரு சொல் முன் சீரில் பாதியும், பின் சீரில் பாதியுமாக (உண்ணீர்+உண்- -ணீர்+என்று) அமைகிறது!

எதானால் இப்படியெல்லாம்? ஏன் ஒரு சொல்லே ஒரு சீராக இருக்கக் கூடாது?

இதற்கு அடிப்படையான காரணம்: சொற்கள் பொருள் அடிப்படையில் அமைகின்றன, ஆனால் சீர்கள் ஓசை அடிப்படையில் அமைகின்றன.  

மேலே உள்ள பாடல்களை (இயல்பான ஓசையோடு) படித்துப் பார்த்தால் இது விளங்கும் 
(குறிப்பாக அந்த பாரதியார் பாட்டு! ‘தன்னன தனனா தானா, தன்னன தனனா தானா என்ற ஓசையில் இருப்பதைக் கவனியுங்கள்!)

ஆனால், திருக்குறள், புறநானூற்றுப் பாடல்களில் இப்படி பொதுவான ஓசை அமைப்பு ஏதும் இல்லயே? அதில் எல்லாம்தளைஎன்பதற்கு ஏற்ப சீர்கள் அமைகின்றன. அதைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்க: பாடல் (கவிதை) எளிமையாக, படித்த (அல்லது கேட்ட) உடன் பொருள் புரியும்படி இருக்க வேண்டுமானால் ஒரு சொல் = ஒரு சீர் என்று அமைவதே நல்லது. ஆனால், இது எப்போதும் சாத்தியப்படாது, எப்பவாவது கொஞ்சம் வெட்டி, ஒட்டி அமைத்துக்கொள்ளலாம், பரவாயில்லை! (அதே போல சிறிய சிறிய சொற்களையும் கூட்டிக்கொள்ளலாம்நின்முன்என்பதைப் போல! இயன்றவரை சொல்லை எசகுபிசகு என்று வெட்டுவதைத்தான் தவிர்க்க வேண்டும்! ‘வந்தபை யனோர ழகியபெண் ணைக்கண்டான்என்றெல்லாம் வாசகரைப் படுத்தக் கூடாது!)

பாடம் இவ்வளவுதான்!  

மீண்டும் ஒரு முறை சில கலைச்சொற்களை (Technical terms) நினைவுபடுத்திவிடுகிறேன்:

குறள் இரண்டுகுறளடிஇரண்டு சீர்கள் உள்ள அடி
சிந்து மூன்றுசிந்தடிமூன்று சீர்கள் உள்ள அடி
அளவு நான்குஅளவடிநான்கு சீர்கள் உள்ள அடி (இதுதான் பொதுவாக அதிகமாக கையாளப்படும் அடி. Default! எனவேதான்அளவுஎன்ற பெயர்!)
நெடில் ஐந்துநெடிலடிஐந்து சீர்கள் உள்ள அடி
கழிநெடில் ஐந்துக்கும் மேல்கழிநெடிலடி ஐந்துக்குமேல் சீர்கள் உள்ள அடிகள்.

இனி பயிற்சி:

தமிழில்பழமொழிஎன்று நிறைய வாக்கியங்கள் வழக்கில் உள்ளன. பொதுவாக இவை அளவடிகளாக இருக்கும். சில சமயம் குறள், சிந்து, நெடிலடிகளும் உண்டு. அதே போல ஔவையாரின்ஆத்திச்சூடி’ ‘கொன்றை வேந்தன்போன்ற ஒரு அடியினால் அமைந்த இலக்கியமும் உண்டு.  

இதைப் போல சில (குறைந்தளவு பத்து) ’அடிகளை இயற்றுக.  
இதுதான் பயிற்சி. (குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி எல்லா வகையிலும் இயற்றுக!)

சில எடுத்துக்காட்டுகள்:

இயல்வது கரவேல்’ (குறளடி)

செய்வன திருந்தச் செய்’ (சிந்தடி)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ (அளவடி)

பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்’ (அளவடி) [இது ஒரு விடுகதை!]

கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்தும் கொடுக்கும்’ (நெடிலடி)

கறுப்புச் சட்டைக் காரன், காவலுக்குக் கெட்டிக் காரன்’ (கழிநெடிலடி) [அவன் யார்? இதுவும் விடுகதைதான்!]

தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ (எண்சீர் கழிநெடிலடி)

குறிப்பு: பழமொழிகள் மேலோட்டமாய் எளிதாகத் தெரிந்தாலும், அவற்றில் ஆழ்ந்த பொருளும், எதுகை மோனை போன்ற சொல்நயங்களும் இயல்பாக அமைந்திருப்பதையும் பார்க்கலாம். இயன்றவரை நீங்களும் அப்படியே இயற்றப் பாருங்கள்இயன்றவரை!

அடுத்த பாடம்: தொடை (விரைவில்...)