12.25.2015

பாடம் - 3: சீர்


எழுத்து, அசைபார்த்தாச்சு, அடுத்து?  சீர்.

எழுத்துகள் சேர்ந்து அசையாகும், அசைகள் சேர்ந்து சீராகும்.

பேச்சில் ‘சொல்’ என்பதற்கு இணையாக கவிதையில் ‘சீர்’ (ஒரு சீர் ஒரு சொல்லாகவும் இருக்கலாம், சில சொற்களின் கூட்டாகவும் இருக்கலாம், ஒரு சொல்லே இரண்டு சீராக பிரிந்தும் இருக்கலாம்!)

அசைகள் இரண்டு என்று பார்த்தோம் (அதாங்க, ‘நேர்’ & ‘நிரை’.) இந்த இரண்டும் எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் சேர்ந்து சீராகலாம், ஆனால் நான்கு அசைகளுக்கு மேல் இருக்கும் சீர்கள் அத்தனை சிறப்பில்லாதவை என்று நம் முன்னோர் ஒதுக்கிவிட்டார்கள் (நாலசையே அவ்வளவா தேவைப்படாது, மூனு அசைவரைதான் தனித்தன்மையோட இருக்கும், நாலசைச் சீர்கள் ஒலிக்கும் போது இரண்டு இரண்டசைச் சீர் மாதிரி ஒலிக்கும் வாய்ப்பு இருக்குல!)

‘நேர்’ ‘நிரை’ ஆகிய இரண்டு அசைகளையும் ‘அசைச்சீர்’ என்று சொல்லலாம் (அதாவது ஒரே ஒரு அசை இருக்குற சீர்!)

இது இரண்டோடு குற்றியலுகரம் சேர்ந்து வருவதும் உண்டு, அதெல்லாமும் அசைச்சீராகவே கொள்ளப்படும்.
  • நேர் + கு.உ = நேர்பு (பற்று, பாடு, பாட்டு) 
  • நிரை + கு.உ = நிரைபு (உலகு, கலப்பு, தராசு, நடாத்து) 
ஆனா, இந்த நேர்பு, நிரைபு ஒரே ஒரு இடத்துலதான் அப்படி சொல்லப்படும், அது (அப்பறம் சொல்றேனே…)

இனி நாம ஒன்றுக்கு மேற்பட்ட அசைகள் வர சீர்களைப் பார்க்கலாம்…

உங்களுக்குக் கணினியில் பயன்படுத்தப்படும் ‘பைனரி’ (இருமம்; ‘இருமல்’ இல்லீங்க, ‘இருமம்’!) கணக்கு தெரியுமா? நம்ம சீர் வாய்ப்பாடும் அது போலவேதான் இருக்கும்…

முதல்ல சீர்களைப் பார்ப்போமா?  

இரண்டு அசைகள் வரும் சீர்கள்: ஈரசைச் சீர் 
2^2 = 4 சீர்கள் வரும்:

ஈரசைச் சீர்கள் - வாய்ப்பாடு
நேர்.நேர் தேமா தே/மா 00
நிரை.நேர் புளிமா புளி/மா 10
நிரை.நிரைகருவிளம்கரு/விளம்11
நேர்.நிரைகூவிளம்கூ/விளம்01


சீர்களுக்கு நம் முன்னோர் அழகாகப் பெயர்களும் வைத்துள்ளனர் பாருங்கள். இவை ஏனோதானோ பெயர் அல்ல, இந்தப் பெயர்களே அந்தந்த சீர்களுக்கான எடுத்துக்காட்டு (அசை பிரித்து உள்ளது பாருங்கள், 3வது வரிசை) இதனால் இப்பெயர்கள் ‘வாய்ப்பாடு’ என்றும் அழைக்கப்படும் (’வாய்ப்பாடு’ - கிட்டத்தட்ட Mnemonic!)
’பைனரி’ வாய்ப்பாட்டையும் கவனிக்கவும்! 0 – நேர், 1 – நிரை!

மூன்று அசைகள் வரும் சீர்கள்: மூவசைச் சீர்
2^3 = 8 சீர்கள்:

மூவசைச் சீர்கள் - வாய்ப்பாடு
நேர்.நேர்.நேர் தேமாங்காய்தே/மாங்/காய் 000
நிரை.நேர்.நேர் புளிமாங்காய் புளி/மாங்/காய் 100
நிரை.நிரை.நேர் கருவிளங்காய் கரு/விளங்/காய் 110
நேர்.நிரை.நேர் கூவிளங்காய் கூ/விளங்/காய் 010
நேர்.நேர்.நிரை தேமாங்கனிதே/மாங்/கனி 001
நிரை.நேர்.நிரை புளிமாங்கனி புளி/மாங்/கனி 101
நிரை.நிரை.நிரை கருவிளங்கனி கரு/விளங்/கனி 111
நேர்.நிரை.நிரை கூவிளங்கனி கூ/விளங்/கனி 011


சீர்களையும் அவற்றின் பெயர்களையும் நன்றாக உள்வாங்கிக் கொள்க! (இது மிக எளிதுதான்!)

சீர்களின் வாய்ப்பாட்டில் இன்னொரு வசதியும் உள்ளது:
சீர்களின் ‘தன்மை’ பெரும்பான்மையாக அதன் இறுதி அசையினால் வருவது, எனவே சீர்களின் பெயர்களின் இறுதியைச் சொல்வதன் மூலம் நாம் ஒரு சீர்த் தொகுதியையே சுட்டிக் காட்ட இயலும்…

எடுத்துக்காட்டாய், ‘மாச் சீர்’ (அல்லது ‘மா’) என்றால் ‘தேமா’ ‘புளிமா’ ஆகிய இரண்டு ஈரசைச் சீர்களும் குறிக்கப்படும், இரண்டிலுமே ‘நேர்’ இறுதியாக இருப்பது (’மா’ = ‘நேர்’ என்பதையும் கவனிக்க!) அதே போல, ’கனிச்சீர்’ என்றால் ’தேமாங்கனி’, ‘புளிமாங்கனி’, ‘கருவிளங்கனி’, ‘கூவிளங்கனி’ ஆகிய (நிரை இறுதியாகிய) நான்கு மூவசைச் சீர்களும் குறிக்கப்படும் (இப்படியே ‘விளச் சீர்’, ‘காய்ச் சீர்’ என்பதும்!)

மூவசைச் சீர்கள் எட்டோடும் இறுதியில் ‘நேர்’ மற்றும் ‘நிரை’ இரண்டில் ஒன்றைச் சேர்த்தால் பதினாறு நாலசைச் சீர்கள் வரும். இவை அவ்வளவாக கவிதையில் கையாளப்படுவதில்லை, எனினும் இவற்றின் வாய்ப்பாடு கொஞ்சம் மாறுபடும், எனவே இவற்றையும் ஒரு பார்வை பார்த்து வைப்போம்…

நாலசைச் சீர்கள் - வாய்ப்பாடு
நேர்.நேர்.நேர்.நேர் தேமாந்தண்பூதே/மாந்/தண்/பூ 0000
நிரை.நேர்.நேர்.நேர் புளிமாந்தண்பூ புளி/மாந்/தண்/பூ 1000
நிரை.நிரை.நேர்.நேர் கருவிளந்தண்பூ கரு/விளந்/தண்/பூ 1100
நேர்.நிரை.நேர்.நேர் கூவிளந்தண்பூ கூ/விளந்/தண்/பூ 0100
நேர்.நேர்.நிரை.நேர் தேமாநறும்பூதே/மா/நறும்/பூ 0010
நிரை.நேர்.நிரை.நேர் புளிமாநறும்பூ புளி/மா/நறும்/பூ 1010
நிரை.நிரை.நிரை.நேர் கருவிளநறும்பூ கரு/விள/நறும்/பூ 1110
நேர்.நிரை.நிரை.நேர் கூவிளநறும்பூ கூ/விள/நறும்/பூ 0110
நேர்.நேர்.நேர்.நிரை தேமாந்தண்ணிழல்தே/மாந்/தண்/ணிழல் 0001
நிரை.நேர்.நேர்.நிரை புளிமாந்தண்ணிழல் புளி/மாந்/தண்/ணிழல் 1001
நிரை.நிரை.நேர்.நிரை கருவிளந்தண்ணிழல் கரு/விளந்/தண்/ணிழல் 1101
நேர்.நிரை.நேர்.நிரை கூவிளந்தண்ணிழல் கூ/விளந்/தண்/ணிழல் 0101
நேர்.நேர்.நிரை.நிரை தேமாநறுநிழல்தே/மா/நறு/நிழல் 0011
நிரை.நேர்.நிரை.நிரை புளிமாநறுநிழல் புளி/மா/நறு/நிழல் 1011
நிரை.நிரை.நிரை.நிரை கருவிளநறுநிழல் கரு/விள/நறு/நிழல் 1111
நேர்.நிரை.நிரை.நிரை கூவிளநறுநிழல் கூ/விள/நறு/நிழல் 0111


’காய்’ ‘கனி’-யோடே ‘பூ’ ‘நிழல்’ சேர்க்காமல் ஏன் நடுவில் மாற்றிவிட்டனர்?

என்னதான் வாய்ப்பாடாக இருந்தாலும் இவையும் அர்த்தமுள்ள சொற்களாக இருக்க வேண்டும் என்று எண்ணியே அப்படிச் செய்தனர்.

  • தேமா – தேன் போன்ற இனிய மா (மாம்பழம்) 
  • புளிமா – புளிப்பான மா (தேமா, புளிமா – மர வகைகளும் ஆகும்!) 
  • கருவிளம் – ஒரு வகை பூச்செடி (Blue pea) 
  • கூவிளம் – வில்வ மரம் 
  • தேமாங்காய், தேமாங்கனி – தேமாவின் காய், பழம் (கனி) – இப்படியே மற்றவையும்! 
  • ண்பூ – குளிர்ச்சியான பூ (தண்மை – குளிர்ச்சி; கவனிக்க 3 சுழி ணகரம்!)
  • நறும்பூ – வாசனையான பூ (நறு- = மணம், வாசனை) 
  • தண்ணிழல் (தண்+நிழல்) – குளிர்ச்சியான நிழல் (அதாவது, ‘தேமாதண்ணிழல்’ என்றால் தேமா மரத்தின் குளிர்ச்சியான நிழல் என்று பொருள் படும்! மற்றவையும் இப்படியே…) 
  • நறுநிழல் – வாசனையான நிழல்

(இதையெல்லாம் படிக்கும்போதே சுகமா தூக்கம் வரும் எனக்கு :-) உங்களுக்கும் தூங்கம் வந்தா நான் போடுற மொக்கை கூட காரணமா இருக்கலாம்!)

அப்பா… சீர் பற்றி எல்லாம் முடிந்ததா?

ஒரே ஒரு விஷயம் மட்டும் பாக்கி:
ஈரசைச்சீர்களுக்கு ’இயற்சீர்’, ‘ஆசிரியச் சீர்’, ‘ஆசிரிய உரிச்சீர்’ என்றெல்லாமும் பெயர்.
இயல்பான சீர்கள் என்பதால் இயற்சீர் என்று பெயர். இவை அதிகமாக ஆசிரியப்பாவில் வருவதால் மீதி இரண்டு பெயர். (வெண்பாவிலும் மற்ற பாக்களிலும் கூட இவை நிறையவே வரும். ஆனால், ஆசிரியப்பாவுக்கே இவை சிறப்பாக உரியவை, எனவே இந்தப் பெயர்கள்!)

மூவசைச் சீர்களுக்கு ‘உரிச்சீர்’ என்று பெயர். இந்த எட்டில், நான்கு காய்ச்சீர்களுக்கும் ‘வெண்பா உரிச்சீர்’ என்றும், நான்கு கனிச்சீர்களுக்கும் ‘வஞ்சியுரிச்சீர்’ என்றும் பெயர். (அந்தந்தப் பாக்களில் அமைவதால் இந்தப் பெயர்கள்!)

நாலசைச் சீர்களுக்குப் ‘பொதுச்சீர்’ என்று பெயர். இவை வஞ்சிப்பாவில் மட்டுமே வரும். (மற்ற பாக்களில் வந்தாலும் இரண்டு இயற்சீர்களாய்ப் பிரிந்து நிற்கும், எனவே அப்படியே கொள்ளப்படும். எடுத்துக்காட்டாய், ‘கடற்பிறகோட்டிய’ என்ற நாலசைச் சீர், ‘கடற்பிற(கு)’ ‘ஓட்டிய’ என்று ‘கருவிளம்’, ‘கூவிளம்’ சீர்களாய்க் கொள்ளப்படலாம்!)

மேலே சொன்னதெல்லாம் கீழே அட்டவணையாய்:

சீர்கள் இடம்பெறும் பாக்கள்
சீர்பெயர்இடம்பெறும் பா
ஈரசைச்சீர்இயற்சீர், ஆசிரிய உரிச்சீர்ஆசிரியப்பா
மூவசைச்சீர்உரிச்சீர்(கீழே காண்க)
--காய்ச்சீர்வெண்பா உரிச்சீர்வெண்பா, கலிப்பா
--கனிச்சீர்வஞ்சி உரிச்சீர்வஞ்சிப்பா
நாலசைச்சீர்பொதுச்சீர்வஞ்சிப்பா


[சீர், அதன் தன்மை, அமைப்பு புரிந்தால் போதும். இந்தப் பெயர்களையெல்லாம் இப்போதே மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, மனப்பாடமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை! ‘நேர்நேர்’ சீர் என்பதைவிட ‘தேமா’ வசதி, அவ்வளவுதான்! கவிதை எழுதும்பொழுது இதெல்லாம் தேவைப்படாது! ஆனால், பின்வரும் பாடங்களை மேலும் எளிதாகப் புரிந்துகொள்ள இந்த கலைச்சொற்கள் (technical glossary) உதவும்!]

அவ்ளோதான்! ஆங்ங்ங்… ஒன்னு பாக்கி இருக்கே… பயிற்சி!

பேச்சுவாக்குல நாம் நான்கு பாக்களையும் குறிப்பிட்டுவிட்டோம் கவனிச்சீங்களா?
ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா & வஞ்சிப்பா நாலும்தான் அவை.

இவைகளைப் பற்றி விளக்கமாக பின்னால் பார்ப்போம், இப்போதைக்கு ஆசிரியப்பாவைப் பற்றி மட்டும் சுருக்கமா, அடிப்படையா தெரிஞ்சுப்போம் (நல்லா கவனிங்க, இதான் ஹோம்வொர்க் – ஆசிரியப்பா இயற்றப் போறோம்…)

ஆசிரியப்பா:
மூன்று அடிக்குக் குறையாமல் இருக்கனும்.
3-றுக்கு மேல் எத்தனை அடி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர் இருக்கனும் (இயற்சீர், அதாங்க ஈரசைச்சீர் மட்டுமே! எப்பவாச்சு ‘காய்ச்சீர்’ வரலாம் தப்பில்ல, மத்த எதுவும் வரக்கூடாது, முக்கியமா ‘கனிச்சீர்’ வரவே கூடாது!)
எல்லா அடியிலும் நாலு சீர் வருவது நிலைமண்டில ஆசிரியப்பா. கந்த சஷ்டிக் கவசம் இந்த வகைதான்.
கடைசி அடிக்கு முன்னாடி அடி மட்டும் மூன்று சீர் வருவது நேரிசை ஆசிரியப்பா. சங்க இலக்கியம் பெரும்பான்மையும் இந்த வகை.
இதுல கடைசி அடியின் கடைசி சீர் ‘’ல முடியனும்.

எடுத்துக்காட்டு பாருங்க:

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று; 
நீரினும் ஆர்அள வின்றே - சாரல் 
கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு, 
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே! 
குறுந்தொகையின் 3வது பாடல்.
அழகான பாடல். விளக்கம் தேவையா? (கடைசியில் தருகிறேன்!)

முதலில் சீர்களைக் கவனியுங்கள்.

கருவிளம் புளிமா; கூவிளம் புளிமாங்காய்
கூவிளம் கூவிளம் தேமா – தேமா
புளிமா புளிமாங்காய் தேமா
புளிமா புளிமா கூவிளங்காய் தேமா(ஏ)

<சொற்களைப் பார்த்தவுடன் அவற்றின் அசை அமைப்பும், வாய்ப்பாடும் தெரிந்துகொள்வது தேவை… இதையும் பயிற்சி செய்க! திருக்குறள், சங்க இலக்கிய பாடல்களை எடுத்துக்கொண்டு அசைபிரித்துச் சீர்களை இனம் கண்டு பயிற்சி செய்க! உங்கள் பயிற்சியை இங்கே பகிரலாம்…> 

மூன்று இடங்களில் காய்ச்சீர் வந்துள்ளது (முதல் அடியில் உள்ள ‘புளிமாங்காய்’ஐ ‘புளிமா’ என்றும் கடைசி அடியில் உள்ள ‘கூவிளங்காய்’ஐ ‘கூவிளம்’ என்று கொண்டாலும் சரிதான், காரணம் கடைசி அசை குற்றியலுகரம்!). மற்ற அனைத்தும் இயற்சீர்.

கடைசி அடியின் கடைசி சீர் ‘ஏகாரம்’ பெறுகிறது. இது சும்மா ‘ஏ’ என்று சொல்லிவிடுவது அன்று, பாட்டின் மொத்த உயிரும் அந்தக் கடைசி சொல்லில்தான் உளது, அதற்கு அழுத்தம் தரத்தான் இந்த ‘ஏ’ (நட்பே! இங்கே ’நட்பு’ என்பது ’காதல்’)

சரியா? ஆசிரியப்பா எழுதிப் பார்க்கத் தயாரா?

முதலில் நல்ல ஒரு கருத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்க, பின் பாவாக புனைக! தொடக்கத்தில் சிறியதாக இருக்கட்டும் (நான்கு முதல் ஆறு அடிகள் வரை,) போகப் போக பெரியதாக எழுதலாம் (சங்க இலக்கியத்தில் 782 அடிகள் கொண்ட பாவும் உள்ளது! நான் 133 அடி கொண்ட ஒரு ஆசிரியப்பாவை எழுதியுள்ளேன்!) (கீழே எனது பா ஒன்றையும் தந்துள்ளேன்!)

வாழ்த்துகள்…

அடுத்த பாடம்: அடி 
*****************************************************
குறுந்தொகைப் பாடலின் விளக்கம்: (விருப்பமிருந்தால் படிக்கலாம்!) 

இது தலைவி சொல்வதாக அமைந்த பாடல். தலைவன் தலைவியைக் காதலிப்பது வெறும் புணர்ச்சிக்காகத்தான், அவன் இவளைத் திருமணம் செய்துகொள்ள மாட்டான் என்று இடித்துரைக்கிறாள் தோழி, அவளுக்குப் பதில் சொல்லும் விதமாக தங்கள் காதல் உயர்ந்தது என்று சொல்கிறாள் தலைவி, அதுதான் இந்தப் பாடல்:

பூமியைவிடப் பெரியது, வானத்தைவிட உயர்ந்தது கடலைவிட ஆழமானது எங்கள் காதல்! மலைச்சரிவில் (சாரல்) உறுதியான கொம்பை (கருங்கோல்) உடைய குறிஞ்சிப்பூவிலிருந்து தேனீக்கள் தேனை எடுத்துக் கூடு கட்டும் (இழைக்கும்) நாட்டின் தலைவனோடான (நாடன் – குறிஞ்சி நிலத் தலைவன்) எனது காதல் (நட்பு) சிறப்பானது (அதைப் பற்றி நீ சந்தேகப்படாதே!)

எனது ஆசிரியப்பா: 
கவிதை இலக்கணம் கற்க வந்தால்
கவிதை இயற்றிக் காகிதம் நிரப்புக,
எழுத எழுதத்தான் வசப்படும்
இலக்கணம் என்ற இனிய ஜாலமே!

உங்கள் பாக்களை (பா முயற்சிகளை) கருத்தில் இடலாம - அனைவரின் விமர்சனத்திற்கும் தயாராக / என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க!)

அடுத்த பாடம்: அடி 

12.20.2015

பாடம் - 2: அசை



குற்றியலுகரம் புரிந்ததா? (முதல் பாடத்தை நன்றாகப் புரிந்துகொண்ட பின்பே இதற்கு வரவும். இதே விதியை அனைத்துப் பாடங்களுக்கும் பின்பற்றுதல் பொதுவாக நலம்!)

எழுத்தில் மீதம் இருப்பது ஒன்றுதான்குற்றியலிகரம்.

இது எளிமையானது: குற்றியலுகரம் வந்து அதற்குப் பிறகுகரத்தில் தொடங்கும் சொல் வந்தால் குற்றியலுகரத்தின்உகரம்’ ‘இகரமாக மாறிவிடும், அப்படி மாறிய இகரமே குற்றியலிகரம் (இதுவும் அரைமாத்திரை அளவே ஒலிக்கும்!)

நாடுகுற்றியலுகர இறுதி,
யாதுயகரமெய் தொடக்கம், இரண்டும் புணர்ந்தால்?

நாடு + யாது = நாடியாது (-> ஆனதைக் கவனிக்க)

இந்தடி’-இல் உள்ள’-தான் குற்றியலிகரம் (எல்லாடீயில் விழும் எல்லா -யும் குற்றியலிகரம் அல்ல!)

கவனிக்க: தமிழின் அரிதான சில சொற்களில் புணர்ச்சி இல்லாமலே வரும் குற்றியலிகரமும் உண்டு: ‘மியாஎன்ற சொல்லில் (’கேண்மியா’, ’சொன்மியாஎன்று வரும் வினை வடிவங்கள்!) வரும்குற்றியலிகரம். ஆனால் இவை பெரும்பான்மையும் வழக்கற்றுவிட்டதால் நாம் இவற்றைப் பற்றி அவ்வளவாக கவலைப்பட வேண்டாம் (இப்போதைக்கு!))

கு., கு. எல்லாம் முடிந்ததா! எதற்காக இதில் தொடங்கினோம்? செய்யுள் (இலக்கணம் அமைந்த கவிதை) என்று வரும்பொழுது அதன் எழுத்துக்களின் எண்ணிக்கையும் அளவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவை (மாத்திரை) முன்பே பார்த்தோம். கு., கு. ஆகியவை தமக்கு இயல்பான மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிப்பவை, எனவே இவற்றைச் செய்யுளில் கையாள்வதில் கவனம் தேவை

செய்யுளின் ஒவ்வொரு உயிரும் உயிர்மெய்யும் ஒரு எழுத்தாக கொள்ளப்படும், உயிர் இல்லாத மெய்கள் எண்ணப்படா (’உயிர்’ ‘மெய் [உடம்பு]’ என்ற பெயரே எத்தனை ஆழ்ந்த அர்த்தத்தோடு அமைக்கப்பட்டுள்ளது பாருங்கள்!)

அதாவது செய்யுளைப் பொறுத்தவரைம்மா’ 2 எழுத்து, ‘ஆமாவும் 2 எழுத்து! அரை மாத்திரை அளவுள்ள மெய்கள் எண்ணப்படாததைப் போல, அரை மாத்திரை அளவுள்ள கு., கு. ஆகியனவும் எழுத்தாகக் கொள்ளப்படா. ஆனால் அதற்கு ஒரு சின்ன விதி இருக்கிறதுஎன்ன?

குற்றியலுகரத்திற்குப் பிறகு உயிரெழுத்து வந்தால் அந்தக் கு. மெய்போல கொள்ளப்படும் (உண்மையில் அது மெய்தான், காரணம் உயிர்வந்தால் உகரம் போய்விடும்பொறுமை, கீழே விளக்குகிறேன்…)

பொட்டு + ட்டான் = பொட்டிட்டான்
பொட்டு + இட்டான் => பொட்ட் + இட்டான் (உயிரெழுத்து வந்தால் குற்றியலுகரபோய்விடும்!)*
பொட்ட் + ட்டான் => பொட்டிட்டான் (உகரம் போனபின் நிற்கும் வல்லின மெய்யெழுத்தின் மீது வரும் உயிர் ஏறிக்கொள்ளும், இயல்பு புணர்ச்சி!)

*இவ்விதி கொஞ்சம் முக்கியமானது, இதை இன்னும் விளக்கமாகதளைகளைப் பற்றிப் பேசுகையில் பார்க்கலாம்!

தாக்கு + ணங்கு = தாக்ணங்கு (4 எழுத்து)

கொக்கு + யிரம் = கொக்காயிரம் (4 எழுத்து)

வந்து + ந்தான் = வந்தீந்தான் (3 எழுத்து)

போட்டு + டைத்தான் = போட்டுடைத்தான் (4 எழுத்து)

உண்டு + ன்றான் = உண்டென்றான் (3 எழுத்து)

படகு + ட்டி = படகோட்டி (4 எழுத்து)


இதற்கு மாறாய், கு.-க்குப் பின் உயிர்மெய் வந்தால் (சொல்லின் முதலில் மெய்யெழுத்து வரவே வராது!) அது அப்படியே புணரும், அப்போது அது எழுத்தாகக் கொள்ளப்படும்

போட்டு + கொண்டான் = போட்டுக்கொண்டான் (4 எழுத்து)

உண்டு + சென்றான் = உண்டுசென்றான் (4 எழுத்து)

[போட்டுக்கொண்டான் என்பதில் ‘க்’ வந்தது ‘வல்லினம் மிகுதல்’ என்ற இலக்கணத்தால். இதைப் பற்றி எழுத்திலக்கணத்தில் கற்கலாம். விரும்பினால் நன்னூல் படிக்கலாம்.]

சரியா?

எழுத்துக்கு அடுத்து அசை. அசைதல் என்றால் பொருந்துதல். எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தி இருப்பது அசை. ஆங்கிலக் கவிதை இலக்கணத்தில்Syllableஎன்பதற்குச் சமானமான ஒரு விஷயம் இந்தஅசை’. (வடமொழி, பண்டைய கிரேக்க செய்யுளியல்களிலும் இதற்கு நிகரான அமைப்புகள் உண்டு!)

அசையைப் பலவிதமாக விளக்கலாம், நான் என் வழியில் செய்யப் போகிறேன் (என் வழி மொழியியல் வழி! Linguistic approach!)

ஒரு சொல்லை எழுத்து எழுத்தாக எழுதினாலும், அதனை உச்சரிக்கும் போது மொத்தமாகத்தான் உச்சரிக்கின்றோம் (படிப்பதும் அப்படித்தான், எழுத்துக்கூட்டிப் படிப்பதில்லை!)

அம்மாஎன்ற சொல்லை-ம்-ம்-என்று உச்சரிப்பதில்லை நாம், ‘அம்மாஎன்று ஒரே மூச்சில் சொல்லிவிடுகிறோம், சரியா? இதையே இன்னும் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் சிறுசிறு இடைவெளிகள் விடுகிறோம் என்பது தெரியும்அதாவதுஅம்-மாஎன்று இரண்டு கூறுகளாய் அச்சொல்லை நாம் உச்சரிப்போம்இந்த இரண்டு கூறுகளே இரண்டு அசைகள்!

அம்ஒரு அசை, ‘மாஒரு அசை! (எழுத்துக்களின் இந்த உச்சரிப்புக் கூட்டணிதான்அசை’! Syllable!)

அசைகளை எப்படி அடையாளம் காண்பது?

ஒரே சிறந்த வழிஉச்சரித்துப் பார்ப்பதுதான்.

வேண்டுமானால் சில குறுக்குவழிகள்^ சொல்லித்தரலாம்:
  • ) சொல்லின் இடையில் எங்கெல்லாம் மெய்யெழுத்து வருகிறதோ அங்கெல்லாம் ஒரு அசை முடியும். (அம்மா – ‘அம்ஒரு அசை!)
  • ) இரண்டு குறில்கள் அடுத்தடுத்து வந்துவிட்டால் அது ஒரு அசை (’தகடு’ – ‘தகஒரு அசை, மிச்சமிருக்கும்டுஒரு அசை)
  • ) குறில் நெடிலும் ஒரு அசை (’விடாது’ – ‘விடாஒரு அசை!)
  • ) நெடில் தனியாக வந்தால் ஒரு அசை (’நாடு’ – ‘நாஒரு அசை, மீதிடுஒரு அசை!)

^குறுக்குவழி என்ற சொல்லை நான் ‘Short-hand’, ‘Thumb Rule’, ‘Short Cut’ போன்ற பொருளிலேயே இங்கே கையாள்கிறேன், ‘கெட்ட வழிஎன்ற பொருளில் அல்ல!

அசைகள் எப்படியெல்லாம் அமையலாம்?

1. குறில் மெய் – ‘அம்’ (அம்-மா)
2. குறில் குறில் – ‘தக’ (தக-டு)
3. குறில் குறில் மெய் – ‘உனக்’ (உனக்-கு)
4. நெடில் – ‘நா’ (நா-டு)
5. நெடில் மெய் – ‘காட்’ (காட்-டு)
6. குறில் நெடில் – ‘விடா’ (விடா-து)
7. குறில் நெடில் மெய் – ‘கொடாக்’ (கொடாக்-கண்-டன்)
8. குறில் (இது சொல்லின் முதலில் வராது, இறுதியில் ஒரே ஒரு குறில் மட்டும் மிச்சமிருந்தால் அது ஒரு அசையாகிவிடும், மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில்டு’, ‘கு’, ‘துபோல!)

ஒரு சொல்லின் அசைகளை அடையாளம் கண்டுகொள்வது செய்யுளை இயற்ற/அலச மிகத் தேவையான திறன். மேலே --- என்று சொன்ன வரிசையில் பழகுங்கள். அதாவது, முதலில் மெய் வரும் இடமெல்லாம் ஒரு அசை, பின் இரண்டு குறில் வருவது, பின்னர் குறில் நெடில்இப்படி பழகினால் எளிது:

கேட்டுக்கொண்டிருந்தான் இதனை அசை பிரிப்போமா?

ட், க், ண், ந், ன்இவை இருக்கும் இடமெல்லாம் ஒரு கோடு போடுவோம், இதெல்லாம் ஒரு அசை:

கேட்/ டுக்/ கொண்/ டிருந்/ தான்அவ்வளவுதான்!

இதிலே என்னென்ன அமைப்புகள் எல்லாம் உள்ளன?

/கேட்/ - 5
/டுக்/ - 1
/கொண்/ - 1
/டிருந்/ - 3
/தான்/ - 5

சரியா? இன்னொரு சொல்: நதியோடுநீசெலுத்து

முதலில்நதிஎன்ற இரண்டு குறில்கள், ஒரு அசை /நதி/
அடுத்துயோநெடில், ஒரு அசை /யோ/
அடுத்துடுநீ குறில் நெடில், ஒரு அசை /டுநீ/
அடுத்துசெலுத் குறில் குறில் மெய், ஒரு அசை /செலுத்/
மீதி இருக்கும்து ஒரு அசை /து/ அவ்வளவுதான்!

நதியோடுநீசெலுத்து => நதி/ யோ/ டுநீ/ செலுத்/ து

/நதி/ - 2
/யோ/ - 4
/டுநீ/ - 6
/செலுத்/ - 3
/து/ - 8

புரிந்ததா? (”இல்லை!” என்றால் பொறுமையாக பேப்பர் பேனாவுடன் இன்னும் ஒரு முறை படித்துப் பாருங்கள், அப்படியும் பிடிபடவில்லை என்றால் என்னைத் தொடர்புகொள்க!)

வீட்டுப்பாடம்(? ஹா ஹா!) தருவதற்கு முன் ஒரே ஒரு செய்தி:  
இந்த அசைகளுக்குப் பெயர் வைத்துள்ளனர் நம் முன்னோர், அட! ‘நேர்’ ‘நிரைஎன்று பெயர். (மெய்யெழுத்தைக் கணக்கிடாமல்) அசையில் ஒரே ஒரு எழுத்து இருந்தால் அதுநேர்’, இரண்டு இருந்தால் அதுநிரை’ (இந்தப் பெயர்களே அந்தந்த அசைக்கு எடுத்துக்காட்டாய் அமைவதைக் கவனிக்க, இது தற்செயல் அல்ல!)

1, 4, 5, 8 – நான்கும் நேரசைகள் (’உன்’, ‘நீ’, ‘தூள்’, ‘து’)
2, 3, 6, 7 – நான்கும் நிரையசைகள் (’பகு’, ‘சினம்’, ‘நிலா’, ‘பளார்’)

இனி பயிற்சி: 
வேறென்ன! கீழ் காணும் சொற்களை அசை பிரிக்கவும்! நேர், ’நிரை என்று குறிப்பிடவும்:

-டு.: திருவள்ளுவர்திரு/வள்/ளுவர்நிரை/நேர்/நிரை

  1. நீ
  2. நான்
  3. நிலா
  4. காற்று
  5. ஆழ்ந்த
  6. ஆகாயம்
  7. இடபாரூடர்
  8. சித்தமெலாம்
  9. தேர்ந்தெடுத்த
  10. வண்ணமயம்
  11. எழுத்தெல்லாம்
  12. பகற்றவச்சிறிதே
  13. அக்கினிக்குஞ்சொன்று
  14. கொங்குதேர்வாழ்க்கை
  15. உலகெலாமுணர்ந்தோதற்கரியவன்
  16. தக்கத்தகதகதாம்
[விருப்பமும் நேரமும் இருந்தால்திருக்குறள்’ ‘புறநானூறுஆகிய நூல்களில் இருந்து சொற்களைத் தேர்ந்தெடுத்து அசை பிரித்துப் பார்க்கவும்அதையும் இங்கே இட்டால் சரியா தவறா என்று சொல்ல நான் தயார்!]

அடுத்த பாடம்: சீர்